புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, மறமடக்கி, ஏம்பல் உள்ளிட்ட பல கிராமங்களில் இளைஞர்கள், விவசாயிகள் முயற்சியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் சொந்த செலவில் செய்து வருகின்றனர். இதற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கொடுப்பதுடன் நிதியும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நெடுவாசல் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவுள்ள நெடுவாக்குளத்தை நெடுவாசல் நீர்மேலாண்மைக்குழுவினர் சீரமைத்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுவாக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர கோரிக்கையும் விடுத்தனர். அதன்படி கடந்த 3 நாட்களாக குளத்தை அளவீடு செய்யும் பணியை பொதுப்பணித்துறை, வருவாய்துறையினர் செய்தனர். இதில் சுமார் 45 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பலரும் விவசாயம் செய்து வருவது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தான் நெடுவாசல் வடக்கு பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராசு நேற்று தன்னிடம் இருந்த 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு வெளியேறியதுடன் தன் நிலத்தில் ஆக்கிரமிப்பு அடையாளக் கல்லை தானே நட்டார். அதே போல இன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி தான் வைத்திருந்த ஒரு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தைவிட்டு வெளியேறியதுடன் குளம் சீரமைக்க தன்னால் இயன்ற நிதியை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் 42 ஏக்கர் அளவிற்கு நெடுவாக்குளம் மற்றும் அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பாளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறுவார்கள் என்று நம்புவதாகவும், அவர்களும் வெளியேறி நீர்மேலாண்மைக்குழுவின் குளம் தூர்வாரும் பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் கூறும் போது, கொத்தமங்கலத்தில் சொந்த செலவில் 110 நாட்களாக நீரநிலைகளை சீரமைத்து வருகிறோம். அந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தந்தால் தான் முழுவதும் சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர கோரிக்கை மனு கொடுத்து 2 மாதம் ஆகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் சில குளம் இருந்த இடங்கள் பட்டா நிலம் என்று பதாகை வைத்துள்ளனர். அவற்றின் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு உதவினால் நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்றனர்.