புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 30 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கலா என்பவரும், தினேஷ் ராஜா என்பவர் ஆசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் புள்ளியில் கடந்த 10ஆம் தேதி (10.07.2025) தலைமை ஆசிரியர் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களைப் பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்யக் கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பெற்றோர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கலா தெரிவிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளாகப் பள்ளி கழிவறையை வந்து சுத்தம் செய்ய ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பள்ளியில் உள்ள மாணவர்களைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது அதனை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் இந்த சம்பவம் குறித்து பள்ளியில் நாளை (14.07.2025) விசாரணை மேற்கொண்டு ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.