Skip to main content

கேள்வி கேட்ட மாமியார்; ஆத்திரத்தில் கொலை செய்த மருமகள்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

pudukkottai malaikudipatti tea incident for mother in law 

 

புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு மனைவி பழனியம்மாள் (வயது 75). இவரது மருமகள் கனகு (வயது 42). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கனகிடம் தேநீர் கேட்டுள்ளார். தேநீர் கொடுக்கும் போது ஏன் ஆறிப்போய் உள்ளது என்று கேட்டு மருமகளைத் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மருமகள் கனகு அருகில் கிடந்த சைக்கிள் பழுது நீக்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாள் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இலுப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருமகள் கனகுவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.