Skip to main content

பலத்த பாதுகாப்பு; பெரும் பதற்றத்தில் புதுக்கோட்டை!

Published on 06/05/2025 | Edited on 06/05/2025

 

Pudukkottai in high tension on clash between two group at temple

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வின் போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே நடந்த மோதலில் அரிவாள் வெட்டு சம்பவம் ஏற்பட்டு இரு தரப்பிலும் சுமார் 17 பேர்கள் காயமடைந்தனர். இந்த மோதலில், ஒரு வீடு, 3 பைக்குள் எரிக்கப்பட்டது. மேலும் 4 பைக்கள்,  கார்கள், ஒரு அரசு பஸ் கண்ணாடி, நெடுஞ்சாலை ரோந்து ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியே பதற்றமான சூழலாக காணப்பட்டு வருகிறது.

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் வடகாடு வந்தார். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

இந்த மோதல் சம்பவத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வீடு எரிக்கப்பட்டதால் 14 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 14 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, வடகாடு பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று இரவு முதல்வே அங்கேயே தங்கி கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், 300க்கும் மேற்பட்ட போலீசார், வடகாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். 

Pudukkottai in high tension on clash between two group at temple

இதனிடையே, மோதல் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே நேற்று (05.05.25) சுமார் 21.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர், பட்டியலின சமூகத்தினர் அங்கிருந்து கிளம்பி அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், பட்டியலின தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே சமூகவலைத்தளத்தில் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலித் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வடகாடு அருகே உள்ள கொத்தமங்கலம், புல்லான் உடுதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளையும் இன்று மூடுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது அரசு பேருந்து ஒன்று தாக்கப்பட்டதால், புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, வடகாடு வழியாக பட்டுக்கோட்டை, பேராவூரணி செல்லும் பேருந்துகள் அனைத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

சார்ந்த செய்திகள்