/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/160_24.jpg)
அரசு பள்ளிக்கு வகுப்பறைகளே இல்லாமல் 4 ஆண்டுகளாக தகரக் கொட்டகையில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், மழைக்கு புத்தகப் பைகளுடன் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் கடந்த 2002, 2003 ம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு ஒரு கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த போது, திருநாளூர் தெற்கு, வடக்கு, குளமங்கலம், ஆவணத்தான்கோட்டை, சிட்டங்காடு, கரிசக்காடு போன்ற பல கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் படிக்க வந்தனர்.
2017, 2018 காலங்களில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக பழுதாகி படிக்கட்டுகள் உடைந்து கொட்டியதால் இடியும் நிலையில் உள்ள கட்டடத்தை நம்பி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று பெற்றோர்கள் சொன்னதால் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் வகுப்பறை கட்டடம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை உறுதி செய்து இனிமேல் இந்த வகுப்பறைகளை பயன்படுத்தக் கூடாது என்று 2019 ம் ஆண்டு பூட்டி சீல் வைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_130.jpg)
வகுப்பறை கட்டடம் பூட்டி சீல் வைக்கும் முன்பு புதிய கட்டடம் கட்டும் வரை வகுப்புகள் நடத்த தற்காலிமாக அரை சுவருடன் தகர சீட்டுகள் அமைத்து தற்காலிக வகுப்பறை தகரக் கொட்டகை அமைத்து கொடுத்தனர். அந்த கொட்டகையும் கஜா புயலில் சேதமடைந்து மராமத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பழுதான பயன்படுத்த முடியாத பூட்டி சீல் வைத்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படவில்லை.
தற்போது 6 முதல் 10 ம் வகுப்பு வரை 205 மாணவ, மாணவிகளும் தகரக் கொட்டகையில் அமர்ந்து படித்து வரும் நிலையில் மழை பெய்தால் மழைத்தண்ணீர் வகுப்பறைகளுக்குள் வந்து விடுவதால் மாணவர்கள் புத்தகப் பைகளை தூக்கி வைத்துக் கொண்டு மழை நிற்கும் வரை ஓரங்களில் நிற்க வேண்டியுள்ளது. மேலும், சைக்கிள் நிறுத்த பொதுமக்கள் அமைத்துக் கொடுத்த தகரக் கொட்டகையிலும் மழையில் நனையாமல் நின்று வருகின்றனர். இனிமேல் வடகிழக்கு பருவமழை காலத்தில் மாணவர்கள் எப்படி மாணவர்கள் அமர்ந்து படிப்பார்களோ தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_132.jpg)
இது குறித்து உள்ளூர் இளைஞர்கள் கூறும் போது, “எங்கள் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து படிக்கிறார்கள். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விண்ணப்பித்துள்ளோம். விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயரப் போகிறது. ஆனால் ஒரு கட்டடம் கூட இல்லை தகரக் கொட்டகையில் தான் நடக்கிறது என்பது தான் வேதனை. கடந்த 5 வருசமா நாங்க கொடுக்காத மனுக்கள் இல்லை. ஆனால் எந்தப் பயனும் இல்லை. இப்ப மழை தொடங்கிடுச்சு மழைத் தண்ணீர் வகுப்பறைகளுக்குள் புகுந்து மாணவ, மாணவிகள் நிற்பதைப் பார்க்க முடியல.
பல ஊர்களில் கட்டடம் இருந்தாலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுறாங்க ஆனால் எங்க ஊர்ல ஒரு கட்டடம் கூட இல்லை கட்டித்தாங்கனு கேட்டாலும் கிடைக்கல. அதனால்மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு மாணவராக வெளியே போனால் பிறகு பள்ளிக்கூடத்தையே மூட வேண்டி வரும். அதனால்மாணவர்களை இங்கேயே விடுங்கள் என்று கெஞ்சி தங்க வைத்திருக்கிறோம். அதிகாரிகளிடம் போய் கேட்டால் புலி வருது கதையா இந்த வருசம் கட்டடம் வரும், வரும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மழை பெய்ததும் தங்கள் குழந்தைகளை அழைக்க வந்த ஒரு அம்மா தன் சேலையால் குழந்தைகள் நனையாமல் பாதுகாப்பதைப் பாருங்கள். இதன் பிறகாவது மனமிறங்கட்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/161_30.jpg)
இனிமேலாவது எங்கள் ஊர் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் வரும் என்று நம்புறோம். உடனே அதற்கான உத்தரவாதம் கிடைக்கலன்னா மாணவர்களை சீருடையோட அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய் ஆட்சியரிடம் முறையிட காத்திருக்கிறோம்” என்றனர்.
கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசுப் பள்ளிகளைப் பார்த்து இது போல தமிழ்நாடு அரசுப் பள்ளிகளையும் அதி நவீன பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றார். இப்படி உயர்ந்த கட்டடம், பளபளக்கும் பளிங்குத்தரை, ஏசி, இணையத்துடன் கூடிய கணினி, ஸ்மார்ட் போர்டு, ஒயிட் போர்டு என அனைத்தையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆசை. அப்படி ஒரு ஆசையில் பிறந்தது தான் ஏழை மாணவர்களின் சத்துக்குறைபாடுகளைப் போக்கும் காலை உணவுத் திட்டம். இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மழலையர் வகுப்புகளுக்கும், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வரையும் விரிவாக்கம் செய்ய கேட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் கனவு அரசுப்பள்ளிகளின் அதிநவீன வசதியாகஇருக்கும் பட்சத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளே இல்லாமல் 4 ஆண்டுகளாக தகரக் கொட்டகையில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், மழைக்கு புத்தகப் பைகளுடன் ஓரமாக ஒதுங்கிநிற்பதும் வேதனை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)