Skip to main content

கஜாவின் பெயரால் உயிர் மரங்கள் கடத்தல்... துணைபோகும் அதிகாரிகள்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

வறட்சி மாவட்டம் புதுக்கோட்டை அதிலும் குடிதண்ணீருக்கே திண்டாடும் பகுதி மணமேல்குடி ஒன்றியம், ஆவுடையார்கோயில் ஒன்றியங்கள். மரங்கள் இன்றி மழையும் இல்லை, மழையின்றி விவசாயமும் இல்லை. வானம்பார்த்த பூமி சுட்டெரிக்கும் கோடை வெயில். அதனால் இளைஞர்களின் முயற்சியால் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

puthukottai

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதில் மரங்கள் சாய்ந்தது. 50 ஆண்டுகள் பின்னோக்கி போனது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரங்களை பாதுகாப்பதுடன் புதிய மரக்கன்றுகளை வைத்து வளர்க்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் அதிகாரிகள் துணையோடு உயிராக நிற்கும் மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்.
 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள கல்லணை கால்வாயில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை அகற்ற நாகுடி அலுவலகத்தில்  ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால், சாய்ந்த மரங்களோடு வினைதீர்த்த கோபாலபுரத்தில் கால்வாய் கரையில் நின்ற கஜாவின் தாக்குதலையே எதிர்கொண்டு உயிராகவும் நேராகவும் நின்ற வாகை மரங்களையும் வெட்டியுள்ளனர். பச்சை மரத்தை ஏன் வெட்டனும் என்று அப்பகுதி விவசாயிகள் கேட்க பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தான் ஏலம் கொடுத்தார் என்று சொல்லிக் கொண்டே மரத்தை வெட்டியவர்கள் அவசரமாக டிராக்டரில் மரத்தை ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

puthukottai

 

நாகுடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தென்னரசுவிடம் இது பற்றி நாம் கேட்ட போது, கஜா புயலில் சாயந்த மரங்களை தான் ஏலம் விட்டோம் என்றவரிடம் நேராக நிற்கும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதே என்றோம். இல்ல இல்ல அந்த மரங்களும் சாய்ந்து தான் நின்றது என்றார். நேராக நிற்கும் மரங்களை வெட்டுவது போன்ற படங்கள் அனுப்புகிறேன் என்று அவரது எண்ணுக்கு அனுப்பினால் அந்த படங்களை பார்க்கவே இல்லை.
 

ஒட்டுமொத்த மரங்களையும் இழந்து நிழல் இல்லாமல் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவிக்கும் மக்கள் புதிய மரங்களை வளர்க்க நினைக்கும்போது, அதிகாரிகளோ இருக்கும் மரங்களை வெட்டலாமா? ஏசியில இருக்கின்ற அதிகாரிக்கா தெரியும் மரத்து நிழலின் அருமை. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.