Skip to main content

விவசாயிகளின் மரபு மாறாத திருவிழா...ஆயிரக்கணக்காண பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலம்.

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

தமிழர்களின் விழாக்கள் அத்தனையும் அர்த்தமுள்ள விழாக்களாகத் தான் இருக்கும். ஆடி மாதம் என்றாலே கிராமங்களில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை குலதெய்வங்களாக வழிபடும் மரபு இன்றளவும், தமிழக கிராமங்களில் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குல தெய்வமாக உள்ள இயற்கை காடுகளில் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள். அப்படி ஒரு விழா தான் முளைப்பாரித் திருவிழா. முந்தைய காலங்களில் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் வீரியத்தையும் தரத்தையும் அறிய விதைப்புக்கு முன்பே சோதனை செய்வது வழக்கம்.

 

அப்படி கிராமத்தில் உள்ள அத்தனை விவசாயிகளும் தங்களிடம் உள்ள விதைகளை மண் சட்டிகளில் தூவி நிழலில் வளர்த்து, அதன் வீரியத்தை அறிவார்கள். அப்படி முளைத்து வளர்ந்த பயிர்களை ஆட்டம், பாட்டம், கும்மி, கோலாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று  கிராம காவல் தெய்வங்களுக்கு படைத்து வழிபாடுகள் செய்த பிறகே விதைப்புகளை செய்வார்கள். முளைப்பாரியுடன் பெண்கள் செல்லும் போது அதில் நல்ல விதை யார் வீட்டில் உள்ளது என்பதை அந்த பயிர்களை வைத்தே கண்டுபிடித்து விதை வாங்கிக் கொள்வார்கள். இயற்கையாகவே விதை நேர்த்தி செய்வதே முளைப்பாரித் திருவிழாகள். அந்த விழாக்கள் இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.

 

PUDUKKOTTAI FARMERS Thousands of women march SEEDS

 


இந்த விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாவட்டத்தின் பெரிய கிராமமான கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் இணைந்து முளைப்பாரித் திருவிழா நடத்தினார்கள். 10 நாட்களுக்கு முன்பே விதை தூவி வீடுகளில் வளர்த்து வந்த முளைப்பாரிக்கு தினசரி இரவு பெண்கள் ஒரு இடத்தில் வைத்து கும்மியடித்து கொண்டாடினார்கள். இந்த நிலையில் இன்று கிராமத்தில் உள்ள அத்தனை முளைப்பாரிகளும் ஒன்றாக திரண்டு மண்ணடித் திடலில் இணைந்து கும்மியடித்து ஊவலமாக சென்று பிடாரி அம்மன் கோயிலை சுற்றி குளத்தில் விட்டுச் சென்றனர். ஆயிரக்கணக்காண பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றது காண்போரை கவர்ந்தது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.