Advertisment

கோயில் குடமுழுக்கு விழாவில் பிரச்சனை; காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கோயிலூர் கிராமம். இந்த கிராமத்தில் மிகப்பழமையான பாலபுரீஸ்வர் லோகநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் திருப்பணிகள் தொடங்கி நடக்கும் போது இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுப் பல முறை சாலை மறியல்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று (17.03.2025 - திங்கள் கிழமை) அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடந்து முடிந்தது. இதனையடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisment

மாலையில் சுவாமி ஊர்வலம் நடத்த அறநிலையத்துறையினர் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் சுவாமி சிலைகளைத் தூக்க அனுமதிக்க கூடாது எனப் பிரச்சனை செய்த நிலையில் மற்றொரு தரப்பினர் வழக்கம் போலச் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்குக் காவல் பணியில் இருந்த ஆலங்குடி டி.எஸ்.பி. கலையரசன், ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் உள்பட ஏராளமான போலீசார் அங்கிருந்ததால் உடனே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மைக்செட் சத்தம் அதிகமாக இருப்பதால் சிறிது நேரம் அதனை நிறுத்தி வைக்குமாறு டி.எஸ்.பி. கூறியதால் ஒருவர் மைக் செட்டை நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் மைக்செட்டை நிறுத்தியவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அங்குக் கைகலப்பு ஏற்பட்டு சேர்கள் உடைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைப் பார்த்த காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணி கைகலப்பைச் சரி செய்யச் சென்ற போது அவர் மீது கூட்டத்தில் நின்றவர்கள் சேரில் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதே போலக் கைகலப்பில் ஈடுபட்டவர்களில் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு தரப்பினரும் சாலை மறியல் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் கூட்டத்தைக் களைத்ததுடன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்டவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடங்களில் ஆய்வு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

incident Police Inspector pudukkottai temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe