
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பெருமாள் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அதே பள்ளியில் பயின்று வந்த 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தை நல அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு பெருமாளை போலீசார் நேற்று (18.02.2025) கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அப்போது அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அரசுப் பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.