ADVERTISEMENT

'நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் ரத்து' - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

01:02 AM Apr 09, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரபலமான திருவிழாக்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவும் ஒன்று. வழக்கமாக பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த வருடம் தேர்தல் அறிவிப்பால் திருவிழா சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 12- ஆம் தேதி தேரோட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு அதற்காக மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேற்று (08/04/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன் அதற்காக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதுடன் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களும் அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவிக் கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT