Pudukkottai district passed the Golden Jubilee

இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1948 மார்ச் 3 ஆம்தேதி இந்தியாவுடன் இணைத்தமன்னர் ராஜகோபால தொண்டைமான் கஜானாவையும் அரண்மனைகளையும் மருத்துவமனைகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். சமஸ்தான கட்டடங்களில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்லூரி இயங்கி வந்தது.

இந்தியாவுடன் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இருந்தது. 1974 ஜனவரி 14 ஆம்தேதி அப்போதைய தி.மு.க அரசு புதிய மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்தது. புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதன் நினைவாக ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வளாகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கென்று 99.99 ஏக்கர் நில பரப்பளவும் அதில் உள்ள முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்த அரண்மனையை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்த வனப்பகுதியும் மயில், குயில்போன்ற உயிரினங்கள் வாழும் இயற்கை எழிலுடன் காணப்படும்.

Pudukkottai district passed the Golden Jubilee

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக சி. ராமதாஸ் இ.ஆ.ப 1974 ஜனவரி 14ல் பதவி ஏற்று 3 மாதங்கள் பணியில் இருந்துள்ளார். 1974 ஏப்ரல் 17 ஆம்தேதி இரண்டாவது மாவட்ட ஆட்சியராக எம். மயில்வாகனன் இ.ஆ.ப பதவி ஏற்றிருந்தார். 16வது மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்ற ஷீலா ராணி சுங்கத் இ.ஆ.ப 1990 டிசம்பர் 2 ஆம்தேதி பதவி ஏற்று 1992 ஆகஸ்ட் 31 ஆம்தேதி வரை பதவியில் இருந்த காலத்தில் அறிவொளி கல்விக்காக கிராமம் கிராமமாக சென்றுதன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி பெண்களை உற்சாகப்படுத்தி அனைவரையும் கையெழுத்துப் போடவும் எழுத்துக்கூட்டி படிக்கவும் வைத்து தமிழ்நாட்டில் அறிவொளியில் முதன்மை மாவட்டமாக மாற்றிய பெருமை அவரைச் சாரும். கீரமங்கலத்தில் நரிக்குறவர் பெண்களை கையெழுத்து போட வைத்து அவர்கள் வசிக்கும் காலனியை அறிவொளி நகராக உருவாக்கினார். பெண் குழந்தைகளுக்குசைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்க கவிஞர் முத்துநிலவன் எழுதிய ‘சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி’விழிப்புணர்வு பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த அறிவொளி திட்டம் கர்நாடகாவில் ஒரு பாடமாகவே உள்ளது. தற்போது 50கடந்து 51வது வயதில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 42வது மாவட்ட ஆட்சித் தலைவராக ஐ.சா. மெர்சி ரம்யா இ.ஆ.ப உள்ளார்.

முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் திருச்சியை ஒட்டிய பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாகி இருந்தாலும் கூட புதுக்கோட்டைக்கு கிழக்கே எந்த பெரும் தொழில் வளர்ச்சியும் இல்லாத மாவட்டமாக உள்ளது. ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்துள்ள இந்த மாவட்டத்தில் தற்போது ஆக்கிரமிப்புகளால் பாதிக்கு மேல் அழிந்து தண்ணீர் இல்லாத வறட்சி நிலவும் மாவட்டமாக உள்ளது. தண்ணீருக்காக 1500 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் கூட நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள யாரும் முன்வராததே இந்த வறட்சிக்கு காரணமாகிவிட்டது.

Pudukkottai district passed the Golden Jubilee

Advertisment

இதனால் வனப்பகுதிகள் அழிந்தும், அழிக்கப்பட்டும் தைலமரங்கள் பயிரிடப்பட்டு வந்ததால் வனவிலங்குகளும், பறவைகளும் வாழ்விடம் தேடி அலைந்தே செத்து மடிந்து வருகிறது. சுற்றுலாத் தளங்களின் மேம்பாடு செய்யப்படாததால் வருவாய் குறைந்துள்ளது. பூ, பலா, வாழை, நெல் விவசாயம் நிறைந்த இந்தப் பகுதியில் விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டும் தொழில் வளர்ச்சிகள் ஏதுமில்லை.

இந்த 50 ஆண்டுகளில் சின்னசின்ன தொழில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் நகரமயமாதல் காரணமாக சுற்றுச்சூழல், பழமைகளும் அழிந்துகொண்டுதான் உள்ளது. பொன்விழா கண்ட புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்ட நினைவுத் தூண் கூட பராமரிப்பு இன்றி புதருக்குள் புதைந்து வருவது வேதனை அளிக்கிறது.