தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாவட்டம் புதுக்கோட்டை. ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை ஒவ்வொரு கிராம கோயில் திருவிழாவிலும் ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற வீர விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
இன்று (17/03/2020) விராலிமலை ஒன்றியத்தில் உள்ள ராஜகிரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியை கண்காணிக்க சென்ற அதிகாரிகள் முகக்கவசம் அணிந்திருந்தனர். இந்த நிலையில் கரோனா பரவல் தடுப்பதற்காக மக்கள் பொது விழாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் திரையரங்குள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்ச் 18 முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 30 போட்டிகள் நடந்துள்ள நிலையில் எதிர் வரும் 22- ஆம் தேதி வேந்தனபட்டி, 25- ஆம் தேதி பெருங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.