Skip to main content

இறுதி ஊர்வலத்திற்கு வந்த 'சொர்க்க ரத' ஓட்டுனர் உயிரிழப்பு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

pudukkottai district incident driver

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள ஆயிங்குடி பட்டிணக்காடு பகுதியில் இன்று (16/04/2021) ஒருவர் இறந்ததால், அந்த வீட்டிற்கு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரம்ஸ் வாசிப்பவர்கள், சடலம் வைக்கும் ஃபிரீசர் பாக்ஸ், இறுதி ஊர்வலத்திற்கான சொர்க்க ரதம் ஆகியவற்றுடன் மேல ஒட்டங்காடு கலியமூர்த்தி மகன் சக்தி வாகனத்தை ஓட்ட 6 பேர் வந்துள்ளனர்.

 

இன்று (16/04/2021) மாலை சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஃபிரீசர் பாக்ஸ் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல ஓட்டுநர் சக்தி சொர்க்க ரதத்தை திருப்பியுள்ளார். மற்றவர்கள் வாகனத்தை திருப்புவதற்காக வாகனத்தில் ஏறாமல் காத்திருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் சொர்க்க ரதத்தின் கும்பத்தில் உரசி மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் சக்தி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதைப் பார்த்த அனைவரும் கதறி அழுதனர். துக்க வீட்டுக்குச் சொர்க்க ரதம் ஓட்ட வந்தவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் அறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை செய்து சடலத்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஓட்டுநர் பாண்டிக்குடி ராமநாதன் ஓட்டும் அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.