Skip to main content

கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த உடன் பிறப்புகள்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பொறுப்பாளர்களே திமுக சேர்மன்  வேட்பாளர்களை தோற்கடித்து சாதனை படைத்துள்ளர். தோற்ற சேர்மன் வேட்பாளர்கள் தலைமை வரை புகார் அனுப்பியதுடன் நேரில் சந்தித்து புகார் கொடுக்கவும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.


அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 3 ஒன்றியங்கள் இதில் 3 ஒன்றியங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. மணமேல்குடி ஒன்றியத்தில் கடந்த தேர்தல்களைப் போலவே, இந்த தேர்தலிலும் திமுக முழுமையாக அனைத்து வார்டுகளையும் கைப்பற்றியது. 
 

pudukkottai district dmk party local body election


சேர்மன் வேட்பாளராக பரணி கார்த்திகேயனையும் துணை சேர்மனாக ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமியையும் அறிவித்தது. அங்கு போட்டியின்றி சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துணை சேர்மன் பதவியும் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென மாஜி ஒன்றிய செயலாளர் சீனியார் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சி அறிவித்த சக்தி ராமசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்ய சீனியார் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி கட்சி வேட்பாளரை பரணி கார்த்திகேயன் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டார் என்று மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏவிடம் புகார் சொன்னதுடன் தலைமை கழகத்தில் புகார் கொடுக்க சென்னை சென்றுள்ளார்.

pudukkottai district dmk party local body election


அதே போல ஆவுடையார்கோயில் ஒன்றியத்திலும் திமுக தான் சேர்மன் என்ற நிலையில் மகளிரணி அல்லிமுத்துவை வேட்பாளராக கட்சி அறிவித்தது. ஆனால் அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி, திமுக பரணி கார்த்திகேயன் தரப்பினர் மற்றொரு திமுக கவுன்சிலரான உமாதேவி என்பவரை சேர்மன் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்து திமுக கட்சி அறிவித்த வேட்பாளரை தோற்கடித்ததுடன் துணைத் தலைவர் பதவியும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. இதில் பாதிக்கப்பட்ட மகளிரணி அல்லிமுத்துவும் கட்சி வேட்பாளரை தோற்கடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பிக் கொண்டிருக்கிறார். 


இப்படி தான் கந்தர்வகோட்டை, அன்னவாசல், ஒன்றியங்களிலும் புதுக்கோட்டை மாவட்டக்குழுவிலும் திமுக கட்சி அறிவித்த சேர்மன் வேட்பாளர்களை திமுகவினரே தோற்கடித்து சாதனை படைத்து உடன் பிறப்புகளை வேதனைப்பட வைத்துள்ளனர். 


இந்த நிலையில் தான் ஆவுடையார்கோயில் ஒன்றிய சேர்மன் திமுக உமாதேவி அதிமுக எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

‘குடி’யால் அழிந்த குடும்பம்; தற்கொலை செய்துகொண்ட இளம் தம்பதி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

young couple lost their life in pudukkottai young couple lost their life in pudukkottai

 

குடிப் பழக்கத்தால் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு, திருமணமான 14 மாதங்களிலேயே இளம் தம்பதி தூக்கில் தொங்கிய துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் குடியால் ஒரு குடும்பமே அழிந்து போனதே என்று கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள நிம்பநேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பொற்பனையானுக்கும் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்துள்ள பிரியங்காவுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பொற்பனையான் சிப்காட்டில் எலக்ட்ரீசியனாகவும் பிரியங்கா ஆலங்குடியில் ஒரு துணிக்கடையிலும் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிந்து மாலை வீடு வரும்போது பொற்பனையான் மது போதையில் வருவதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தையும் இல்லை.

 

இந்த நிலையில் கடந்த மாதம் பிரியங்காவின் நகைகளை எடுத்துச் சென்ற பொற்பனையான் தங்க நகைகளை விற்றுவிட்டு அதேபோன்ற கவரிங் நகைகளை வீட்டில் வைத்துள்ளது தெரிய வந்ததால், மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு தாய் வீட்டிற்குச் சென்ற பிரியங்காவை உறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த பொற்பனையான், வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரியங்கா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொற்பனையானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கூலி வேலைக்குச் சென்றிருந்த பொற்பனையானின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகனும் மருமகளும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரது உடல்களையும் இறக்கியுள்ளனர்.

 

சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி 14 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடியால் ஒரு குடும்பமே அழிந்துவிட்டதே என்று அந்த கிராமமே கதறிக் கொண்டிருக்கின்றது.