Skip to main content

சர்ச் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

Pudukkottai District Collector Humanities


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
 


கொத்தமங்கலத்தில் 95 வயது முதியவர் தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி நூங்கு வெட்டி இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு மாதாந்திர முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடக்கை எடுக்க மாவட்டச் செய்தி தொடர்பு அலுவலர் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. அடுத்த நாளே அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியரின் காரில் அழைத்து வரச் செய்து உதவித் தொகைக்கான உத்தவை முதியவருக்கு வழங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயிலுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கோயில் வாசலில் பாத்திரங்களுடன் அமர்ந்து பக்தர்களிடம் கை நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் சென்று அவர்களைப் பற்றி விசாரணை செய்த பிறகு அவர்களுக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பலருக்குத் தொடர்ந்து மாதாந்திர உதவித் தொகை கிடைத்து வருவதால் பிச்சை கேட்டு யாரிடமும் கையேந்துவதில்லை. இப்படி ஏழைகளின் கோரிக்கைகளை தானாக முன்வந்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.
 

 


இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை புதுக்கோட்டை நகரில்  ஒரு விழாவிற்குச் சென்ற ஆட்சியர் விழா தொடங்க  சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதால் எதிரில் உள்ள திருஇருதய ஆண்டவர் தேவாலய வளாகத்திற்குள் சென்றார். அப்போது தேவாலய நுழைவாயிலில் 6 முதியவர்கள் மற்றும் மூதாட்டிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தவர் அவர்களிடம் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் இனிமேல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அருகில் நின்ற அதிகாரிகளிடம் உடனே உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். 

அப்போது ஒரு மூதாட்டி எழுந்து நிற்க முடியாமல் உடல் நலமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து விசாரித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி உடனே அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று சர்ச் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு அனைவருக்கும் முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவை வழங்கினார். கண்கலங்க உத்தரவை பெற்றுக் கொண்ட முதியவர்கள் ஆட்சியருக்கு நன்றி கூறினார்கள்.
 

http://onelink.to/nknapp


நன்றி கூற வேண்டாம் என்ற ஆட்சியர் இனிமேல் யாரும் பிச்சை எடுக்கக் கூடாது. மீறி பிச்சை எடுக்கப் போனால் இந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என்று கூறி அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் தொடரும் இந்த நற்செயலைப் பார்த்துப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்