Skip to main content

தைல மரக்காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

PUDUKKOTTAI CHILD INCIDENT POLICE INVESTIGATION


கடந்த 50 நாட்களாக நடக்காமல் இருந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஒரு கிராமம். முழுமையாக விவசாயக் கூலித் தொழிலாளிகள் நிறைந்த கிராமம். குடிதண்ணீருக்காக அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலையில் ஊற்று தோண்டி தான் தண்ணீர் எடுத்துச் சென்று குடிக்கிறார்கள். 
 


இந்த நிலையில் நேற்று (18/05/2020) காலை அதே கிராமத்தைச் சோ்ந்த அந்தப் பகுதியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனியாக குடிதண்ணீர் எடுக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பிவரவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தைல மரக்காட்டில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதனிடையே சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், நான்கு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.