Skip to main content

புதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு புதிய தமிழ்க்கொடி அறிமுகம்!

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

பரக

 

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட தினத்தையொட்டி, தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து உள்ளிட்ட தமிழ் சங்க நிர்வாகிகள் வெங்கட்டா நகர், தமிழ் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொடியை தலைவர் வி.முத்து ஏற்றினார். 

 

இந்நிகழ்ச்சியில் செயலாளர் பாவலர் சீனு.மோகன்தாஸ், துணை தலைவர் பாவலர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொரியா தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

korieya tamil society new members selected 

 

அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம், ஆராய்ச்சி நோக்கில் தமிழ்ப்பணி, பொதுவான மக்கள் பணி, அறிவியல், சமூகம், அரசியல் தலைமைகளுடனான உரையாடல், மற்றும் கோவிட் பெருந்தொற்று கால உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நன் மதிப்பை பெற்றிருக்கும் அமைப்பாகும். கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் சட்ட திட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்களின் பொறுப்பு காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

 

தமிழ்ச் சமூகத்தில் புதிய தலைமைகள் உருவாவதை ஊக்குவிக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் ஒரு முறை மட்டுமே பொறுப்பு வகிப்பது என்கிற மரபை கொரிய தமிழ்ச் சங்கம் பின்பற்றி வருகிறது.  அவ்வகையில் முனைவர் இராமசுந்தரம் தலைமையிலான முதல் ஆளுமை குழுவின் பொறுப்பு காலம் (மார்ச் 2020 - மார்ச் 2023) நிறைவு பெறுவதால், புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமை குழுவினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் கடந்த 2022 நவம்பர்-டிசம்பர் காலத்தில் நடைபெற்றது.  சங்கத்தின் அறிவுரை குழுவின் உறுப்பினர்-பிரதிநிதி பேராசிரியர் இரா. அச்சுதன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அறிவிப்புகளை வெளியிடுதல் மற்றும் வேட்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை அறிவுரைக் குழு உறுப்பினர் இரா. அச்சுதன், மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர்கள் காமராஜ் ஈஸ்வரன், பெருமாள் முத்துராஜ், மற்றும் தெய்வசிகாமணி இரஞ்சித் குமார் ஆகியோர் செய்தனர்.

 

தேர்தல் முடிவுகள் சங்கத்தின் மூத்த அறிவுரைக் குழு உறுப்பினர்களான முனைவர்கள் போஜன் கருணாகரன், ஆரோக்கியம் அந்தோணிசாமி, செல்லத்துரை ரத்ன சிங் மற்றும் தாமஸ் நேசக்குமார் ஜெபக்குமார் இம்மானுவேல் எடிசன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்பு, பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்திருந்தோர், பணிநிறைவு பெறும் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உள்ளிட்ட ஆளுமை குழுவினர், கொரிய புரவலர் திரு யு சே கியொங், திருமதி கிம் உன் சுக், தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும், பதிப்பாளரும், எழுத்தாளருமான திரு. ஆதனூர் சோழன், மற்றும் பொது ஊடக பேச்சாளரும் அரசியல் தலைவருமான திரு காரை செல்வராஜ் உள்ளிட்ட பொது பார்வையாளர்கள், ஆகியோர் தேர்தல் பணிக் குழுவால் அழைக்கப்பட்டு பொது நிகர்நிலை காணொளி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இந்த முடிவுகளை அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், உரிய அலுவலக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த நடைமுறைகள் தைத்திங்கள் 5-ம் நாளன்று (19 பிப்ரவரி 2023) முழுமையாக நிறைவுபெற்றதன் பேரில் சங்கத்தின் புதிய தலைவர் உள்ளிட்ட தகவல்கள் தற்பொழுது பொதுவெளிக்கு அறியத்தரப்படுகிறது.

 

தலைவராக திருச்சி மாவட்டம், பெருவள்ளப்பூரை சேர்ந்த முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது சுஒன், கொரியா, சுங்கின்வான் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.  துணைத்தலைவராக தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தைச் சேர்ந்த திருமிகு தட்சிணாமூர்த்தி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலத்தை சேர்ந்த திருமிகு பீட்டர் சகாய டார்சியூஸ், செயலாளர் - உள்ளக ஆளுமை பணி - பொறுப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்பொழுது பக்சுலான் எனும் மென்பொருள் நிறுவனத்தில் (சியோல், கொரியா) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த முனைவர் கோவிந்தராஜ் சரவணன் செயலாளர் - பொதுச் செயல்பாடுகள் - பொறுப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கச்சான் பல்கலைக்கழகத்தில் (சொங்னாம், கொரியா) உயிர் நானோ பொறியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், மாங்குடியைச் சேர்ந்த முனைவர் நல்லாள் முத்துசாமி பொருளாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சியோல் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் ஆற்றல்தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இணைப் பொருளாளராக திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த முனைவர் பீட்டர் ஜெரோம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அன்சான் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

கொரியாவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையுமான சரண்யா பாரதிராஜா, கொரியாவில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மா. சாந்தி பிரின்ஸ், சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இரா. சுவாமி ராஜன், தகவல் தொடர்பு செயலாளர் (மென்பொருள் ஆராய்ச்சியாளர், சுஒன், கொரியா) மற்றும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வேதபுரி ஹேமநாதன் (இயந்திர பொறியியல் நிபுணர், சுஒன், கொரியா) ஆகியோர், முறையே, தாயகத் தொடர்பு, மக்கள் தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் கொரிய புரவலர் இணைப்புச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இணைச் செயலாளர் பொறுப்பிற்கு முனைவர்கள் இருதய பாண்டி செலஸ்டின் இராஜா (ஆராய்ச்சியாளர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பு), இராமர் இராஜா மணிகண்டன் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி) மற்றும் ஆறுமுகசாமி சிவகுமார் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - விருதுநகர் மாவட்டம், சிவகாசி) திருவாளர்கள் ஆஷிக் இலாஹி (ஆராய்ச்சி மாணவர், உள்சான் தொழில்நுட்ப நிறுவனம், கொரியா. சொந்த ஊர் - தஞ்சை மாவட்டம், கும்பகோணம்) ஜீவானந்தம் சம்பத் (ஆராய்ச்சி மாணவர், போகாங் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - கோயம்புத்தூர்) ஆறுமுகம் பாரதி (ஆராய்ச்சி மாணவர், யங்னம் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - கடலூர் மாவட்டம், கீழ்காங்கேயன் குப்பம்) மற்றும் திப்பன் மணிகண்டன் (ஆராய்ச்சி மாணவர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - நீலகிரி மாவட்டம், நந்தட்டி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னையை சேர்ந்தவரும், பொறியாளரும், தொழில்முறை சிற்பியுமான சி. தாமோதரன் கொரிய தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளராக செயல்படுவார். மேலும், சங்கத்தின் தேவைக்கேற்ப பொறுப்பாளர்களை நியமனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் உரிமையுடையவராவார்.  எதிர்வரும் தைத்திங்கள் 29-ம் நாள் (12 பிப்ரவரி 2023) அன்று சியோல் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கும் தமிழர் திருநாள் - 2023 நிகழ்வில் கொரிய வாழ் தமிழ் மக்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமை குழுவினர் முறைப்படி பொறுப்பேற்க உள்ளனர். 

 

 

Next Story

பெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020 

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
Korea

 

கொரியா தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கிய விழா – 2020ஐ இணைய வழி கூடுதலாக சங்கத்தைச் சேர்ந்த பெண்களே ஒருங்கிணைத்து நடத்தினார்கள். 

 

இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக செல்வன் கவின் பாரதிராஜாவும் சர்வேஷ் பாரதிராஜாவும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். நிகழ்வின் நோக்கம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் சத்யா மோகன்தாஸ் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசான் குழந்தைகள் நேயப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசானை அறிமுகம் செய்து சரண்யா பாரதிராஜா பேசினார். 

 

தமிழ் ஆசான் சிறப்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதித் ஐசக், க.தட்சினா பாலன், தக்‌ஷாரா, வர்ஷா, மகிழன், எமிலி யாசின், தியா மற்றும் நிலா, ரோஷித் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 

 

கலை இலக்கிய சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் ஆசான் அவர்கள், தாய்மொழியில் கல்வி கற்றலின் முக்கியத்துவத்தினையும், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடிய விடயங்களையும் நமது மக்களிடையே பகிர்ந்து கொண்டார். 

 

இந்த நிகழ்ச்சியை சரண்யா பாரதிராஜா, முனைவர் சத்யா மோகன்தாஸ், சரண்யா ஆனந்தகுமார், விஜயலெட்சுமி பத்மநாபன், முனைவர் கிறிஸ்டி காத்தரின் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.