police

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த நடராஜ் நகரை சேர்ந்தவர் வார்டு மணி என்கிற ராமகிருஷ்ணன் (45). காங்கிரஸ் பிரமுகரான இவர் புதுச்சேரி மாநில அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் ஆவார். மனை வணிக தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் மோதியதில் அவர் கீழே விழுந்தார். அப்போது மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராமகிருஷ்ணனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

Advertisment

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வில்லியனூர் போலீசார் ராமகிருஷ்ணன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரி மேற்குபகுதி காவல் கண்காணிப்பாளர் அரங்கநாதன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை நடந்த பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் வில்லியனூரில் உள்ள கோயில் இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக ராமகிருஷ்ணனனுக்கும் சிலருக்கும் மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த நான்கு ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.