Puducherry Chief Minister meets actor Vijay!

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (04/02/2022) மாலை 05.00 PM மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களத்தில் உள்ளது. அதேபோல், பிரச்சாரத்தின் போது, விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவை பயன்படுத்தலாம் என்று நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஸ்ஸிஆனந்த் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றிருந்தது.

இதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி இன்று (04/02/2022) இரவு 07.00 PM மணியளவில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

Advertisment

எனினும், விஜய் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. விஜயை புதுச்சேரி முதல்வர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.