/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_120.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் - மேற்பனைக்காடு சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்திற்கு, வெள்ளிக்கிழமை மாலை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விவேகானந்தா நகரில் வசிக்கும் கீரமங்கலம் மேற்பனைக்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருஞானம் (51 வயது) சுமார் 50 கிராம் மதிப்புள்ள நெக்லஸ் நகையை அடகு வைக்க வந்துள்ளார்.
நகையை வாங்கிய நிதி நிறுவன ஊழியர் தரத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது போலி நகை என்பது தெரியவந்தது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள இதே நிதிநிறுவனக் கிளையில் கடந்த மாதம் 19ஆம் தேதி ரூ.1 லட்சத்தி 52 ஆயிரத்திற்கு, இதே நபர் போலி நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளதாகநிதிநிறுவன இணையம் காட்டியுள்ளது. அதனால் அந்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு கீரமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், போலி நகையை அடகு வைத்துப் பணம் வாங்க வந்த நபரிடம் நடத்திய விசாரனையில், இந்த நகைகளை தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கார்த்திக் கொடுத்து, அடகு வைக்கச் சொன்னதாகவும், நகையை அடகு வைத்துக் கொடுத்தால், ரூ.2 ஆயிரம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். போலி நகை என்பதை நிதி நிறுவன ஊழியர்கள் கண்டறிந்ததால், உடனே பணத்தை திருப்பிச் செலுத்தி போலி நகைகளை மீட்டுக் கொள்வதாகச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதாவது சனிக்கிழமை மாலைக்குள் பணத்தை திருப்பிச் செலுத்திவிடுவதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், இந்தக் கும்பல் தொடர்ந்து போலி நகைகளைத் தயாரித்து தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள், தனியார் நகை அடகுக் கடைகளில் அடகு வைத்துப் பணமோசடி செய்து வருவதாகக் கூறுகின்றனர், விபரம் அறிந்தவர்கள். மேலும், போலி நகை தயாரிக்கும் போது, வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் உள்ள நகை மதிப்பீட்டாளர்கள் தரம் பார்க்க எந்த இடத்தில் உரசிப் பார்ப்பார்களோ, அந்த இடத்தில் மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பல் போலி நகைகளைத் தயாரித்து, வெளியூர்களில் சென்று, அடகு வைத்துப் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களை போலீசார் கைது செய்து முறையாக விசாரித்தால், எங்கெல்லாம் போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்துள்ளார்கள் என்பது அம்பலமாகும். ஆனால், காவல் நிலையம் செல்லாமல் இருக்க, உடனே பணத்தை திருப்பிக் கொடுத்துச் சமாளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முழு விசாரனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்கள் பொது மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)