Publication of guidelines for melting Ganesha idols

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisment

விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது, அதனைப்பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ். இயற்கை வண்ணங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

Advertisment

சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள். பூமாலைகள். அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூமாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிவகைகள் இருப்பின், அதனை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மறுபயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மேலும், மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.

சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையினை மூழ்கவைத்து கரைக்கலாம். தெளிந்த நீரினை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றினை உலரவைத்து தோட்டத்தில் மண்ணாகப் பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.