
தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், செப். 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில், செப். 1ஆம் தேதி பள்ளிகளை 50 சதவீத மாணவர்களுடன் திறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா பரவலைத் தடுக்க 6 அடி இடைவெளியியில் மாணவர்களை அமரவைக்க வேண்டும். மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல்வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி ஆகியவை பள்ளியில் இருத்தல் வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களைப் பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடம் நடத்தலாம். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். முதல் நாள் 50 சதவீதம் மாணவர்கள் வந்தால், அடுத்தநாள் மீதமுள்ள 50 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பன போன்ற நடைமுறைகளைத் தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.