
தைல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி காணப்படுகிறது. அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் பல வருடக் கோரிக்கையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவையடுத்து ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டாலும் இன்றும் வளர்ந்துகொண்டும், வளர்க்கப்பட்டும் வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகாவில் பொதுப்பணித்துறை / நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆவுடையார்கோயில் பாசனப் பிரிவுக்கு சொந்தமான இச்சிக்கோட்டை கிராமத்தில் உள்ள இச்சிக்கோட்டை கண்மாய், ஏணங்கம் கிராமத்தில் உள்ள ஏணங்கம் கண்மாய், ஏணங்கம் காட்டுக் கண்மாய்களில் வனத்துறை தைல மரங்கள் வளர்ப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக பாசனதாரர்கள் பொதுப்பணித்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர், நீர்வளத்துறை அதிகாரிகள் புகாரில் குறிப்பிட்டிருந்த கண்மாய்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு பொறியாளர் தினகரன், மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘தைல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக பாசனதாரர்கள் கூறுவதால் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007இன் படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இச்சிக்கோட்டை, ஏணங்கம், ஏணங்கம் காட்டுக்கண்மாயில் உள்ள தைல மரங்களை அகற்றித்தர கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள், “விரைந்து தைல மரங்கள் அகற்றப்பட்டால் கண்மாயில் தேங்கியுள்ள மழைத் தண்ணீரைப் பாதுகாக்கலாம்” என்றனர்.