Advertisment

மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 

Public Welfare Workers Union Attention Demonstration!

"தகுதி அடிப்படையில் எங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் எங்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் நலன் சார்ந்து அமைந்துள்ள தி.மு.க. அரசு நிறைவேற்றும் என எதிர் பார்க்கிறோம்" என மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10ந் தேதி மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

ஈரோடு மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் நம்மிடம், "முன்னாள் முதல்வர் கலைஞர், 1989ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்தார். 1991ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்ததும் நாங்கள் எல்லோரும் திமுகவினர் எனக் கூறி எங்களைப் பணி நீக்கம் செய்தார். மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. ஆனால் 2001ல் அ.தி.மு.க. "ஜெ" ஆட்சி வந்ததும் தொடர்ந்து எங்களை பணிநீக்கம் செய்தார். மறுபடியும் கலைஞர் தலைமையில் 2006ல் திமுக ஆட்சி வந்ததும் பணி வழங்கப்பட்டது. ஆனால், இரக்கமே இல்லாமல் 2011 "ஜெ" ஆட்சியில் மீண்டும் நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டோம். ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் பணி நியமனம் செய்யப்படுவதும், அ.தி.மு.க ஆட்சி வந்ததும் பணிநீக்கம் செய்யப்படுவதும் எனத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இதை உச்ச நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கால்பந்து போல மக்கள் நலப் பணியாளர்கள் நடத்தப்படுவது நியாயமா என நீதிமன்றம் கூறியது. ஆனால் அதை எதிர்த்து அப்போது அ.தி.மு.க அரசு மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றது. தற்போது மீண்டும் நீதிமன்றம் கல்வித்தகுதி அடிப்படையில் காலிப் பணியிடங்களை மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை இவர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தற்போது தி.மு.க. அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியாளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூபாய் 7500 மட்டும் கிடைக்கும். நாங்கள் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். இதில் தவறு நடந்தால் கூட எங்களால் எதுவும் சுட்டிக் காட்ட முடியாது.

மொத்தம் 13 ஆயிரத்து 500 பேர் ஆரம்ப நிலையில் பணி அமர்த்தப்பட்டோம். அதில் சிலர் இறந்துள்ளனர். தற்போது 11,500 பேர் மட்டுமே உள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது 20% மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி உயர்வு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, 760 பேர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சம்பளம் 36 ஆயிரம். இப்போது குறைந்த சம்பளத்தில் பணி நியமனம் செய்வது வருத்தத்துக்குரியது. பணி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் எங்களுக்காக வாதாடினார்.

தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பலர் உள்ளனர். பட்டப்படிப்பு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.எனப் பலரும் படித்துள்ளார்கள். எனவே எங்களுக்கு நாங்கள் படித்த கல்வித்தகுதி அடிப்படையில், நீதிமன்றம் கூறியபடி அரசு நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் எங்களை பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தித்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் எங்கள் சம்பந்தமாகப் பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது" என்றார்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe