Public suffering due to traffic jam

Advertisment

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் மிக்ஜம் புயல் உருவாக உள்ளது. வங்கக்கடலில் இன்று மிக்ஜம்புயல் உருவாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலி காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.

Advertisment

அதேபோல் மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சூளேரிக்காடு, மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 43 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தலும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிளியாற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலை மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அறிவுறுத்தலை மீறி சிலர் அந்த பகுதியில் ஆற்றைக் கடந்து வருகின்றனர். போக்குவரத்து தடைபட்டுள்ளதால்அந்தப் பகுதிமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.