Skip to main content

க்ரஷர்களால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

The public suffering from crushers!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கட்டளை, கீழ்பூதேரி, பெருமுக்கல், தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியபாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காகவும், எம் சாண்ட் மண்ணை தயாரிப்பதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கல் உடைக்கும் க்ரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளிலிருந்து அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக ஆழப்படுத்தி கற்களை உடைத்து எடுப்பதாக கிராம மக்கள் தரப்பில் அவ்வப்போது கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கின்றனர். எந்த அதிகாரியும் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் இயங்கும் க்ரஷர்களால்வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.

 

இரவு பகல் பாராமல் தொடர்ந்து இயங்கும் க்ரஷ்ர்களால் ஏற்படும் காற்று மாசு சாலையில் வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு கண்களில் பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. கல்குவாரி வழியாக வெளியேறும் மாசுகளால் அந்தப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் மிக அதிக அளவில் ஏற்படுவதாகவும், காற்றில் அடித்து செல்லப்படும் க்ரஷர் பவுடர்கள் வீட்டின் உள்ளே வரை வருவதால் உணவிலும், பாலினும் சாம்பல் படிந்து விடுகிறது. மேலும் துவைத்து காயப் போட்ட துணிகளிலும் மண் படிந்து அதை உடுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. இப்படி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.

 

க்ரஷ்ர் பவுடர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய  நிலங்களில் படிந்து விடுவதால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சாலை ஓரம் உள்ள மரங்களில் க்ரஷர் பவுடர் படிந்து மரங்கள் வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. காலப்போக்கில் அந்த மரங்கள் அப்படியே பட்டுப்போய் விடும் என்கிறார்கள். கல் உடைப்பதற்காக குவாரிகளில் வைக்கப்படும் வெடி பொருட்களால் மேலும் மேலும் காற்று மாசுபடுவதுடன் அருகே உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைகிறது. இவைகளைப் பற்றி அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்கின்றனர் கிராம மக்கள்.

 

மேலும் திண்டிவனம் – மரக்காணம் பகுதியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.