ADVERTISEMENT

மணல் குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

07:12 PM Aug 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை, வில்லியநல்லூர், அத்தியாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் 5க்கும் மேற்பட்ட சவுடு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிகள் அனைத்தும் அரசின் விதிகளை மீறிச் செயல்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு ஆழத்தில் மணலை எடுப்பதால் இப்பகுதியில் குடிநீர் பாதிப்பு ஏற்படும் எனவும் இதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அத்தியாநல்லூரில் 'கிரீன் கமர்சியல்' என்ற நிறுவனம் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை மீறி அரசுக்குச் சொந்தமான இடத்திலும் விதிகளை மீறி மணலை எடுத்து விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குவாரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

இவர்கள் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் மணல் குவாரிக்கு 5க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்ற வந்ததால் லாரியை சிறை பிடித்தனர். பின்னர் லாரிகள் அனைத்தும் மணல் ஏற்றாமல் திரும்பிச் சென்றது. மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT