
சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி. தண்டேஸ்வரர்நல்லூர், உசுப்பூர், பள்ளிப்படை உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைக்கத் தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதற்கு அனைத்து ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு அளித்தும் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி நூதனமான முறையில் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து லால்புரம் ஊராட்சியில் உள்ள 1000-திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜாகிர்உசேன் தலைமையில் தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி எம் சேகர், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆனந்த், சாய்பிரகாஷ், சத்தியமூர்த்தி, பி.என் மூர்த்தி ,ராஜேந்திரன், தமிமுன்அன்சாரி, ரவி, கிருஷ்ணமூர்த்தி, ராஜலட்சுமி, இலக்கியா, லதா, வினோதா, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் குடும்பத்துடன் காலையிலிருந்து மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜாகிர்உசேன், “லால்புரம் ஊராட்சியில் 3000 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 300 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. விளைநிலம் உள்ள இடத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அரசாணை உள்ளது. மேலும் நகராட்சியுடன் இணைத்தால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டம் இருக்காது, அதேபோல் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர், வீட்டு வரி மிகவும் அதிகமாக விதிக்கப்படும் இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழிலாளர்கள் எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கருதி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது எனத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.