Advertisment

சாமி சிலைகளை தூக்கிய அதிகாரிகள்; சுத்துபோட்ட பொதுமக்கள் - பரபரப்பான கோவில் 

public stopped the officials who came to take the idol from the Kangayam temple

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது பழையகோட்டை. இந்தப் பகுதியில் மிகவும் பழமையான ஈஸ்வரன் கோவில் ஒன்று அமைந்துள்ளது‌. இந்தக் கோவிலுக்கு காங்கேயம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக வந்துசெல்வது வழக்கம். மேலும், இந்த ஈஸ்வரன் கோவில் கடந்த பல ஆண்டுகளாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால், கோவிலின் கட்டுமானத்தில் விரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தக் கோவிலை அறநிலையத்துறையின் சார்பாக புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணி கடந்த ஒரு வருட காலமாக நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவிலின் முக்கியமான சிலைகள் பாதுகாப்பாக இருந்த அறைகளையும் புதுப்பிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இதனால் கோவில் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக இந்த சிலைகளை மட்டும் கோவிலில் இருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டு, அதன் பிறகு கோவில் திருப்பணிகள் முடிந்த பின்னர், மறுபடியும் சிலைகளை இருந்த இடத்திலேயே வைத்து விடலாம் என முடிவெடுத்துள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறநிலையத்துறை உத்தரவின் பேரில் அதிகாரி அன்னக்கொடி தலைமையிலான குழு, ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் கோவில் உட்பக்கத்தில் ஒரு அறையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 17 சுவாமி சிலைகளை பார்வையிட்டுள்ளனர். அதன் பின்னர், கோவில் குருக்களிடம் சென்று கோவிலில் திருப்பணிகள் முடியும் வரை இங்குள்ள சிலைகளுக்கு முறையான பாதுகாப்பு கிடையாது எனக்கூறிய அதிகாரிகள், இங்கு திருப்பணி முடியும் வரை இந்த 17 சாமி சிலைகளையும் சிவன்மலை கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் மாவட்ட உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திற்கு எடுத்துச்செல்வதாக கூறியுள்ளனர்.

Advertisment

அதன் பிறகு, அங்கு வந்திருந்த அதிகாரிகள் சிலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு கோவிலில் இருந்து வெளியே முயன்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர், எதற்காக எங்கள் கோவில் சிலைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக்கூறி, சத்தம் போட ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்துள்ளது. அப்போது, அவர்களிடம் பேசிய அதிகாரிகள், தாங்கள் சிலைகளை இங்கிருந்து நிரந்தரமாக எடுக்கவில்லை எனவும், கோவிலில் திருப்பணி நடப்பதன் காரணத்தால், இந்த சிலைகளை பத்திரப்படுத்த வேண்டியது தங்களின் கடமை என்றும் எடுத்துக்கூறியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் என்ன கூறினாலும், சமாதானம் ஆகாத சிலர், இத்தன வருசமா இந்த சிலைகள் அத்தனையும் இங்கதான் இருக்குது... எனவும், இது இங்கே இருப்பதுதான் பாதுகாப்பு எனவும் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், செய்வதறியாது தவித்த அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் எடுத்துக்கூறி அங்கிருந்து சிலைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றுள்ளனர். இதனால் மேலும் கடுப்பான பக்தர்கள் சிலர், கோவில் கதவினை மூடிவிட்டு அதிகாரிகள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு சிறைவைத்துள்ளனர்.

இதனையடுத்து, வேறு வழியின்றி தவித்த அதிகாரிகள், காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற போலீசார், பக்தர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும், பக்தர்கள், சிலைகளை வெளியில் எடுத்துச்செல்ல சம்மதிக்க மாட்டோம் என மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். இப்படியே சுமார் 2 மணி நேரம் வாக்கு வாதம் நடந்துள்ளது. அதன் பின்னர், ஒரு வழியாக பக்தர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் கோவிலில் எடுக்கப்பட்டுள்ள சிலைகள் மீண்டும் கோவிலுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என அறநிலையத்துறை ஆணையர் அன்னக்கொடி தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர், 17 சுவாமி சிலைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், அந்தச் சிலைகளை சிவன்மலை அடிவாரப் பகுதியில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

temple thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe