
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (11/11/2021) கரையைக் கடக்கும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது சென்னையில் அதி கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் மூன்று பேரிடர் மீட்பு படை உள்ளது.
ஏரிகளில் இரவு நேரத்தில் தண்ணீர் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றிட அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மழை குறைந்த பிறகு பயிர் சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இன்று இரவிலிருந்து நாளை (11/11/2021) வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். நீர்நிலைகளின் அருகே நின்று செல்பி எடுக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது.
வீட்டில் ஆதார், ரேஷன், கல்விச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை அளவைப் பொறுத்து பேருந்து சேவைப் பற்றி முடிவெடுக்கப்படும். நீர் வரத்துக்கு ஏற்ப நீர்நிலைகளில் தண்ணீர் திறப்பு இருக்கும். நிவாரண முகாம்கள் தேவையான அளவு தயாராக உள்ளன". இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.