Public road blockade in Vikravandi

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பகுதியில் "ஃபெஞ்சல்" புயல் காரணமாக பெய்த கனமழையால் மின்கம்பங்கள் வீழ்ந்தன. இதனையொட்டி, மின்கம்பங்கள் அமைத்திடும் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மரக்காணம் விருந்தினர் மாளிகையில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் காட்சியினை பார்வையிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

Advertisment

அப்போது வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி கே.எஸ். மஸ்தான், லட்சுமணன், சிவா, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத் துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடும் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

இதனையடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த அப்புறப்படுத்தும் பணியில் போலீசார். ஈடுபட்டனர். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்துபோலீசார் பேருந்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.