/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1658.jpg)
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சீனிவாசன். இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக் கடையில் பணியாற்றி வந்தார். ஜனவரி 26 ஆம் தேதி இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சீனிவாசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று, உடற்கூராய்வு முடிந்து கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு கொண்டு வரும் தகவல் அப்பகுதி மக்களுக்கு கிடைத்தது. உடனே எஸ்.எஸ்.கே. மானியம் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு போலீஸ் நிலையம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடலை கொண்டுவந்த ஆம்புலன்ஸைமடக்கிய பொதுமக்கள், ஆம்புலன்சிலிருந்து சீனிவாசன் உடலை இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வேலூர் மாநகரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பிணத்தை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்தப் பேச்சு வார்த்தையில், ‘எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா, மது விற்பனை அமோகமாக நடக்கிறது. 24 மணி நேரமும் எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா, மது போதையில் தெருவில் நின்று அட்டகாசம் செய்கின்றனர். இதனைத் தட்டிக் கேட்டால் பாட்டில் மற்றும் கத்தியால் வெட்டி தாக்குகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. அசம்பாவிதங்களை தடுக்கவும், மக்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டனர்.
மேலும், இந்தப் பகுதியில் இப்போது நடந்ததோடு சேர்த்து மூன்றாவது கொலை. இதுபோன்ற கொலைகள் இனி வரும் காலங்களில் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் செய்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)