ADVERTISEMENT

தனியார் சொத்துக்கள் குறித்து பொதுநல வழக்கு..! மனுதாரருக்கு ஓராண்டுகாலம் தடை..! 

05:36 PM Apr 17, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொது பயன்பாட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்க அனுமதிக்கும் ஷாப்பிங் மால்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டுக்குப் பொதுநல வழக்கை தாக்கல் செய்யவும் அவருக்குத் தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், பொது பயன்பாட்டு பகுதிகளைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விடுவதாகக் கூறி, இந்தியன் மக்கள் மன்ற நிறுவனர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொது பயன்பாட்டு பகுதிகளில் கடைகள் அமைக்கப்படுவது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பொது பயன்பாட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், அந்தப் பகுதிகளை வாடகைக்கு விட்டு சுயலாபம் அடையும் மால்களின் உரிமங்களை ரத்து செய்து, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் சொத்துக்கள் குறித்து பொதுநல வழக்கு தொடர முடியாது எனவும், இதுபோல பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி, நூறு ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம், திட்ட அனுமதியை மீறியது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அமர்வின் அனுமதியின்றி பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஓராண்டு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT