
வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை பகுதியில் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட மக்கள், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, கண்ணமங்களம், சந்தவாசல் பகுதி மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். தினமும் ஆயிரம் வெளிப்புற நோயாளிகள் வருகின்றனர். உள்நோயாளியாக இதைவிட அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிப்பதில்லை, மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்குகிறார்கள், சாப்பாடு சரியில்லை போன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து முறையிட நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை டீன் திருமால்பாபுவை சந்திக்க முயல்கிறார்கள். அப்படி வருபவர்களை டீன் சந்திப்பதில்லை. மீட்டிங்கில் உள்ளார் என்ற பதிலையே அவரது அலுவலகத்தில் கூறுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவக்கல்லூரி குறித்து தகவல் தேவையென பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் என டீன்னை அவரது மொபைல் எண்ணில் யார் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. தொடர்ந்து அழைத்தால் அவர்களின் எண்ணை ப்ளாக் லிஸ்ட்டில் போடுகிறார் என்கிறார்கள். புதிய எண்ணில் இருந்து யார் அழைத்தாலும் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அது உண்மையா என்று அறிய நாம் டீன் திருமால்பாபுவின் மொபைல் எண்ணை தொடர்புகொண்டபோது, லைன் பிஸி என்றே பதில் வந்தது. தொடர்ச்சியாக 1 மணி நேரத்தில் 15 நிமிடம் இடைவெளி விட்டு திரும்பத் திரும்ப அழைத்தபோது பிஸி என்றே பதில் வந்தது. 2 மணி நேரம் கடந்து நமது லைனுக்கு வேறு ஒரு எண்ணிலிருந்து பேசியவர், டீன் நம்பர்க்கு எதுக்கு கால் செய்தீங்க எனக் கேள்வி எழுப்பினார். இந்த அதிகாரி மட்டும்மல்ல, அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு இணையதளம் உள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட மாவட்ட, தாலுகா அளவு வரை அனைத்து துறை அதிகாரிகளின் அலுவலக எண், கைப்பேசி எண் போன்றவற்றை வெளியிட்டுள்ளனர்.
அரசு வழங்கிய இந்த எண்ணில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அழைத்து தங்கள் புகாரை தெரிவிக்கலாம், ஆலோசனைகள் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்களை பெரும்பாலான அதிகாரிகள் எடுத்துப் பேசுவதே இல்லை. தங்களுடைய தனிப்பட்ட எண்ணில் அழைத்தால் மட்டுமே பேசுகின்றனர். ஒரு சில அதிகாரிகள் இந்த எண்ணை தங்களுடைய உதவியாளர்களிடம் அல்லது அலுவலகப் பணியாளர்களிடம் தந்து வைத்துள்ளனர். அவர்களும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டீன் திருமால்பாபு இதற்கு முன்பு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன்னாக பணியாற்றினார். அங்கும் அவர் யார் அழைப்பையும் எடுக்கமாட்டார் என்கிறார்கள்.
வேலூரை சேர்ந்த ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதி ஒருவரும் டீன்னும் நெருங்கிய நண்பர்கள். அவரின் சிபாரிசால் திருவண்ணாமலையில் இருந்து டீன் குடும்பத்தினர் வசிக்கும் வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான். மக்கள் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு மக்களையே மதிக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.