Advertisment

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களைக் கட்டணமின்றி பெற ஏற்பாடு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Provision for getting flood victims' certificates free of charge

Advertisment

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பலருடைய புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளது என்று பலரும் தங்களது வேதனையைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், மக்களின் பலருடைய முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எனப் பல ஆவணங்கள் சேதமடைந்ததாகவும், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை செயலர் கூறியுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ‘மிக் ஜாம்’புயல் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சரின் 09.12.2023 நாளிட்ட செய்திக் குறிப்பின்படி,மேற்காண் மாவட்டங்களில் கன மழையின் காரணமாக இழந்த மற்றும் சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களின் (10th/ 11th/ 12th) இரண்டாம்படி நகலினை, மாணவர்கள் நலன் கருதி எவ்வித கட்டணமின்றி வழங்கிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கன மழையில் 10th/ 11th / 12th மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எவ்வித கட்டமின்றி அவர்கள் பயின்ற பள்ளி மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

certificates student
இதையும் படியுங்கள்
Subscribe