
ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எப்-ல் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கான பணி வாய்ப்பை வழங்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல கூறியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டு எழும்பூரில் இருக்கக்கூடிய ரயில்வே மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மண்டபத்தின் மொட்டைமாடி பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விட்டார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us