Skip to main content

ஒ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம்: திருமாவளவன், வேல்முருகன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018



தஞ்சையில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிதாக எண்ணை கிணறு அமைக்கப்பட உள்ள இடத்தை முற்றுகையிட முயன்ற திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் 1000க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களும் கைதாகினர்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக 39 இடங்களில் எண்ணை எடுக்க திட்டமிடப்பட்ட முதலாவதாக அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம், மருவத்தூர் பகுதியில் எரிவாயு எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணை கிணறு அமைக்கும் பணிகளை செய்துவருகிறது.

அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், அதோடு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே இயங்கி வரும் ஒ.என்.ஜி.சி எண்ணை கிணறுகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிதாக எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடாது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒ.என்.ஜி.சி எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் அம்மாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காவிரி உரிமை மீட்பு குழு பெ.மணியரசன், ஓ.என்.ஜி.சி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் கிணறு அமைத்து வரும் தீபாம்பாள்புரத்தை முற்றுகையிட அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பேரணியாக முழக்கமிட்டப்படி சென்றனர்.

தஞ்சை எஸ்.பி, செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசாரை கொண்டு மூன்று அடுக்கு தடுப்பு அறனாக நிறுத்தியிருந்தனர். அதோடு ஒவ்வொரு வீதிகளிலும் தடுப்பு அறன் அமைத்து போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

தேர்வு நேரம் என்பதால் பள்ளி மாணவிகள் போலீசாரின் கெடுபிடியால் பலத்த சிறமத்திற்கு ஆளாகினர், ஒவ்வொரு அறனாக கடந்து செல்லவேண்டிய நிலையானது, சில இடங்களில் மக்கள் செல்ல முடியாதபடி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்களும் கடும் வெயிலில் அவதிப்படும் நிலையானது.

இந்தநிலையில், பேரணியாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் முற்றுகையிட பேரணியாக சென்றனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்கு திருமாவளவன், வேல்முருகன், உள்ளிட்ட 1000க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்