Skip to main content

திண்டுக்கல்லில் புதிய ரஜினிமன்ற செயலாளருக்கு எதிராக கண்டன போஸ்டர்! கூண்டோடு ராஜினாமா செய்ய ரசிகர்கள் முடிவு!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
rajini


திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற செயலாளராக இருந்த தம்புராஜை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைமை அதிரடியாக நீக்கியது. அதைத்தொடர்ந்து தான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ரஜினி மன்ற செயலாளர் ரகுவிற்கு எதிராக மாவட்ட அளவில் ரசிகர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசயில் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவித்து அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட செயலாளராக தம்புராஜ் என்பவர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திலேயே அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக தம்புராஜ் நீக்கப்பட்டதாக மாநில தலைமை அறிவித்தது.

இது திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ரகு என்பவரை மாநில தலைமை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நகர் மட்டுமல்ல மாவட்ட அளவில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம், வேடசந்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் புதிய மாவட்ட செயலாளருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரில் தி.மு.க.வின் கைக்கூலி ரகுவிற்கு ரஜினி மன்றத்தில் மாவட்டச் செயலாளர் பதவியா? என்ற வாசகத்துடன் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் மாவட்ட செயலாளர் தம்புராஜ் ஆதரவாளரும், ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது...
 

thamburaj


திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் சிலர் தம்புராஜ் குறித்து மாநில நிர்வாகிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தாமல் தம்புராஜை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தலைமை நீக்கியுள்ளது. அப்படியிருக்கும் போது தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரகு குறித்தும், மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்யவில்லை. ரகு ஒரு கட்சியின் ஆதரவு நிலையில் உள்ளவர். அவர் எப்படி ரஜினி மன்றத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியும். இதனால் மன்றத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே தம்புராஜ் நீக்கம் குறித்து இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இதுகுறித்து நாங்கள் பலமுறை தலைமை அலுவலகத்திற்கு வர நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டபோதும் கூட, அவர்கள் உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மாநில தலைமை அலுவலகத்திற்கு சென்று எங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளோம் என்று கூறினார்.

ஏற்கனவே தம்புராஜ் நீக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட அளவில் உள்ள 146 நிர்வாகிகள் தங்கள் ராஜினாமா செய்ததாக அறிவித்தனர். தற்போது மேலும் பல நிர்வாகிகள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்