Skip to main content

மக்கள் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறப்போர் இயக்க நிர்வாகிகள் கைது!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
1


மக்கள் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அறப்போர் இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
 

2


லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், லோக் ஆயுக்தா சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், "மக்கள் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டத்தை இன்று சட்ட சபையில் நிறைவேற்ற கூடாது" என்ற கோரிக்கை விடுத்து, தலைமை செயலகம் எதிரில் அறப்போர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

3


இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் மற்றும் அக்தர், பிரசாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவ இளங்கோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்; வசமாக சிக்கிய நயினார் பாலாஜி - ஜெயராமன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Arappor Iyakkam Jayaram interview

 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு வழக்கு குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் விவரிக்கிறார்

 

நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு குறித்த புகாரை முதலில் அறப்போர் இயக்கம்தான் வழங்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலத்தை 46 கோடிக்கு வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 100 கோடி வரை இருக்கும். சென்னையில் இருக்கும் இந்த நிலத்தை திருநெல்வேலியில் உள்ள சப்-ரெஜிஸ்டரார் அலுவலகத்தில் பதிவு செய்தனர். சட்டப்படி இது தவறு. யாருடைய நிலம் இது என்பதை அவர் சரிபார்த்திருக்க வேண்டும். 

 

இளையராஜா என்கிற நபர் ஏற்கனவே மோசடிகளுக்குப் பெயர் போனவராக இருக்கிறார். பட்டா சரியாக இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்யவே முடியும். இளையராஜாவின் பெயரில் அந்தப் பட்டா இல்லை. அந்த ஒரு நிலத்துக்கே 15 பதிவுகளும், பணப்பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது. அந்த சப்-ரெஜிஸ்டரார் இது எதைப் பற்றியும் விசாரிக்காமல் இவர்களோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.

 

இப்போது அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவறே நடக்காமல் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று சொல்லலாம். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் ஆதாரம் இருக்கிறது. மற்றவர்கள்தான் தவறு செய்தனர், அவை தனக்குத் தெரியாது என்று நயினார் பாலாஜி சொல்கிறார். இவரும் சேர்ந்துதான் அந்த தவறைச் செய்திருக்கிறார். இளையராஜா என்பவர் இதில் மட்டுமல்லாமல், இதுபோல் பல குற்றங்களைச் செய்தவர். விசாரணையில்தான் இது குறித்த அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

 

நயினார் பாலாஜி தானும் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலியில் பத்திரப்பதிவு செய்ததே இவர்களுக்கு அங்கு செல்வாக்கு இருப்பதால்தான். பட்டா இல்லாத நிலத்தை ஒருவர் விற்க வந்தால் நீங்கள் எதையும் விசாரிக்காமல் வாங்கி விடுவீர்களா? இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தங்களுக்கான தீர்வைப் பெறுவார்கள். ஆனால் சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் கோர்ட்டுக்கு சென்று வாதாட முடியுமா?

 

இந்தத் துறையே ஒரு மாஃபியா துறை போல் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். இளையராஜா என்பவரை இவர்கள் கைது செய்திருந்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வந்திருக்கும். இந்த வழக்கு இன்னும் விசாரணை அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படும் சூழலும் இருக்கிறது.

 

 

 

Next Story

30 ஆயிரம் ரூபாய் சம்பளம்; கோடியில் புரண்ட பெண் என்ஜினீயர்; போலீசார் அதிர்ச்சி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

madhya pradesh contract engineer hema meena issue

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பெண் பொறியாளர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் லோக் ஆயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மத்தியப் பிரதேச காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்த உதவி பொறியாளராக 2011 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் ஹேமா மீனா (வயது 34). இவரின் மாதச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவர் மீது கடந்த 2020 ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது கடந்த வியாழக்கிழமை அவருக்கு சொந்தமான இடங்களில் மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

போபால் அருகே உள்ள பில்கிரியா என்ற இடத்தில் தனது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் சதுர அடி இடத்தில் கட்டப்பட்ட 40 அறைகள் கொண்ட பங்களாவில் ஹேமா மீனா வசித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த பங்களா முழுவதும் ஆடம்பர பொருட்கள் நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஒன்று மீட்கப்பட்டது. இது தவிர பங்களாவில் இருந்து இரண்டு லாரிகள் மற்றும் பல்வேறு சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டன.

 

madhya pradesh contract engineer hema meena issue

 

மேலும் ஹேமா மீனாவின் பண்ணை வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள அரசு உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மதிப்புள்ள விவசாய உபகரணங்கள், விலை உயர்ந்த மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர அவரது பண்ணை வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பிட்புல், டாபர்மேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இன நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மட்டுமின்றி பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 60 மாடுகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன. இந்த சோதனையில் அவரது வீட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரமானது நாய்களுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இது மட்டுமின்றி இவரது பண்ணை வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான பால் பண்ணை ஒன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் இந்த ஆடம்பர வாழ்க்கை நிலையைக் கண்டு மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையானது மத்தியப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.