ADVERTISEMENT

மின் இணைப்பு கொடுத்தாச்சு;பொய் சொன்ன அலுவலர்களை கண்டித்து போராட்டம்!!

11:07 PM Dec 15, 2018 | bagathsingh

99.99 சதவீதம் மின் இணைப்பு கொடுத்ததாக தவறான தகவலை தெரிவித்து வரும் மின்வாரிய அலுவலர்களைக் கண்டித்து புளிச்சங்காடு கைகாட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்புகளை முழுவதுமாக கொடுத்துவிட்டதாக மின் பணியாளர்களை திருப்பி அனுப்பியதாகவும், முழுவதும் மின் இணைப்பு கொடுத்ததாக தகவல் தெரிவித்து வரும் மின் வாரியத்தைக் கண்டித்தும் எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் புளிச்சங்காடு கைகாட்டியில் பொதுமக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

நவம்பர் 15 ந் தேதி அதிபயங்கரமாக வீசிய கஜா புயலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், நெடுவாசல், உள்ளிட்ட அனைத்து கிராமங்களும் மற்றும் அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வீடுகள், மரங்கள், பயிர்கள், மின் கம்பங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்துள்ளது. புயல் தாக்கி ஒரு 30 நாட்களாகியும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டதாக மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்த தவறான தகவலை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தெரிவித்து வருகிறார். இதைக் கண்டித்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்த மின் பணியாளர்கள் அனைவரையும் அனுப்பி வைத்ததைக் கண்டித்தும் புளிச்சங்காடு கைகாட்டியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார். திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், நெடுவாசல் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் பேசினார்கள்.

இந்த மறியலில் அணவயல், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி, கீரமங்கலம் , புள்ளான்விடுதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான பெண்கள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு மின்சாரம் கொடு, சேதமடைந்த வீடுகள், மரங்கள், கால்நடைகளுக்கு நிவாரணம் கொடு என்றும்.. விவசாய கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழு கடன்களையும் விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று பெண்கள் மடிபிச்சை ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சாலை மறியல் தொடங்கும் முன்பே மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் போலிசார் குவிக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகள் வந்து எங்கள் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தியாகராஜமூர்த்தி, கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன், வட்டாட்சியர் ரெத்னாவதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 18 முதல் 20-ம் தேதிக்குள் 1000 மின் பணியாளர்களை அழைத்து வரவும், 3 ஆயிரம் மின்கம்பங்களை கொண்டு வந்து தேங்கியுள்ள அனைத்து மின்பணிகளையும் சீரமைத்து அனைவருக்கும் வீடுகள், விவசாயங்களுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என ஒளி பெருக்கி மூலம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

விவசாயிகள், பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து சாலை மறியல் போராட்டத்தில் தலைமை ஏற்ற மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது.. ஆலங்குடி தொகுதி முழுமையாக விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் பாசனத்தில் செய்யப்பட்ட பயிர்கள் கருகி வருகிறது. ஆனால் 60 சதவீதம் கூட மின் இணைப்புகள் கொடுக்காமல் முழுமையாக மின் இணைப்புகள் கொடுத்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். மேலும் வராத மின்சாரத்திற்கு மின்கட்டணம் கட்டச் சொல்லி பட்டியல் அனுப்பி உள்ளனர். அவற்றை நிறுத்தி வைப்பதுடன் 3 மாதங்களுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிலை மாறி அனைவருக்கும் முழுமையான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை அதற்கு மின்வாரிய அதிகாரிகள் வந்து உத்தரவாதம் அளித்துள்ளனர். 20 ந் தேதி வியாழக்கிழமைக்குள் ஆயிரம் மின் பணியாளர்களும் 3 ஆயிரம் மின்கம்பங்களும் வரவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மேலும் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT