Advertisment

பா.ஜ.க. அரசுக்கு எதிராக இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும்: மு.க.ஸ்டாலின்

Stalin mk

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். தவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப்பாதையில் அநியாயமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடித்துக் கொண்டிருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

ஐ.ஏ.எஸ்.. உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத் தேர்வை நடத்தியும் தேர்வுசெய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது. இப்போது சிவில் சர்வீஸஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள்பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுன்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.

“நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று போடப்பட்டு வந்த நான்காண்டு கால பகல் வேஷம் இதன்மூலம் கலைந்துள்ளது. பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றே அர்த்தம். எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தை திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு “பவுன்டேஷன் கோர்ஸ்” என்ற போர்வையில், ஒருவகையிலான "நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

exam goverment ias ips m.k.stalin. bjp protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe