தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் அமீர் பேசும்போது, அரங்கில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் நிகழ்ச்சியை நிறுத்துமாறு வலியுறுத்தியதால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறை என்பது முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும், திரைப்பட இயக்குனர் அமீர் மீதும் போடப்பட்டிருக்கக் கூடிய வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டு, பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பறிக்கக் கூடிய செயலை தடுத்திட வேண்டும். உடனடியாக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிலையில் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மூத்த பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்: குமரேஷ்