Skip to main content

அ.தி.மு.க. எம்.பி.க்கு எதிராக இளம்பெண் போராட்டம் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Published on 30/04/2018 | Edited on 30/04/2018


 

சென்னையில் இன்று வக்பு வாரிய தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் இடத்திற்கு அதிமுக எம்பியான அன்வர்ராஜா வந்தார். அப்போது ரொபினா என்ற இளம்பெண் அந்த இடத்திற்கு வந்து அன்வர்ராஜாவுக்கு எதிராக பேசினார். அன்வர்ராஜாவுடன் வந்தவர்கள் அந்த பெண்ணை இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். போலீசாரும் அந்த பெண்ணை இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும் அப்பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அன்வர்ராஜாவையும், அவரது மகனையும் திட்டியப்படியே அந்தப் பெண் சென்றார். மேலும், அன்வர்ராஜாவுடன் வந்தவர்கள், இந்த சம்பவத்தை படம் எடுக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 
 

சென்னையைச் சேர்ந்த ரொபினா கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 2015ம் ஆண்டு எனக்கு சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழாவில் அன்வர்ராஜா மகன் நாசர் அலியிடம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சைதாப் பேட்டையில் உள்ள என் அலுவலகத்துக்கு வந்து என்னிடம் அறிமுகமாகி ஆசைவார்த்தைகள் கூறி பழக ஆரம்பித்தார். பின்னர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டடோம்.
 

என்னிடம் திரைப்படம் எடுக்க பணம் வேண்டும் என்று கேட்டார். அப்போது என்னிடம் உள்ள நகை மற்றும் நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேன். மூன்று ஆண்டுகள் என்னிடம் வாழ்ந்து விட்டு கடந்த மார்ச் 25ம் தேதி வேறு பெண்ணை  திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் அவர் எம்பியாக இருப்பதால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதன்பின் பலமுறை சென்று புகார் அளித்த பின் அவர்மீது காரைக்குடியில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை வழக்கு சென்னையில் உள்ள எந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன் என கூறியிருந்தார்.

படங்கள்: அசோக்குமார்

 


 

சார்ந்த செய்திகள்