" எங்களைக் காக்கிற சாமி அது.! எங்க காக்கின்ற உசுரை அழிக்க விடுவோமா.?" என பவளப்பாறையைக் காப்பாற்ற ஒட்டுமொத்தமாக திரண்டு பொது இடத்திலேயே சமைத்து உண்டுப் போராட்டம் நடத்தி வெற்றிக்கண்டுள்ளனர் ஊர் பொதுமக்கள்

Advertisment

p

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் இறால்பண்ணைகளை அமைத்துள்ளனர் அரசியல் பின்புலம் உள்ள மனிதர்கள். அனுமதியற்ற இறால் பண்ணைகளால் இயற்கைவளம் கொள்ளையடிக்கப்படுகின்றது. அத்துடன் மக்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகின்றது என்று தீவுகளில் உள்ள அரியான்குண்டு, வடகாடு குடியிருப்பு பகுதி மக்கள் இறால்பண்ணைகளை அகற்ற பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

p

Advertisment

மாவட்ட நிர்வாகம் இது வரை செவி சாய்க்காததால் இன்னும் பலர் இறால் பண்ணைகளை அமைக்க இப்பகுதிக்கு வருகின்றனர். அதனின் ஒருபகுதியாக ஞாயிறன்று மாலை வேளையில், ராமேஸ்வரம் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள பாக் ஜலசந்தி கடல் அதிகளவு உள்வாங்கியிருந்த நிலையில் வடகாடுப்பகுதியில், இறால் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணைக்கு கடலில் இருந்து தண்ணீர் எடுக்கவும் கழிவு நீரை வெளியேற்றும் விதமாக கடல் நீர் குறைந்த நேரத்தில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து சுமார் 100 மீட்டர் மீட்டர் நீளத்திற்கு 7 அடி ஆழத்திற்கும் கடலுக்குள் உள்ள சுண்ணாம்புக்கல் மற்றும் அரியவகை பவளப்பாறைகளை சேதப்படுத்தி கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதுகண்டு கொதித்த வடகாடு குடியிருப்பு மாற்றம் அரியான்குண்டு பகுதி மக்கள், " எங்க உசுரு அது..! கடல் அரிப்பிலிருந்தும், ஆழிப்பேரலையிலும் எங்களைக் காக்கக் கூடிய சாமியை இடிக்கலாமா..? என பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து களத்திற்கு வந்த போலீசாரும் வட்டாட்சியரும் பல மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் செவி சாய்க்காத பொதுமக்கள், " அனுமதி இல்லாத இறால் பண்ணைகளை அகற்ற வேண்டுமென எழுத்து பூர்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தெரிவிக்க" அதற்கு உடன்படவில்லை மாவட்ட நிர்வாகம். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த மக்கள் அங்கேயே சமைத்து உண்ணும் போரட்டத்தினை தொடங்கி சமைக்க ஆரம்பித்தனர். இரவு சுமார் 7 மணியளவில் அனுமதியில்லாத இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது.