Skip to main content

ஆசிரியர்களை கரோனா பணிகளில் அமர்த்த தடை விதிக்கக்கோரி வழக்கு!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
highcourt

 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதுக்கு குறைந்த ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமல், அவர்களை பாதுகாப்பு மையப் பணியில் அமர்த்த தடை விதிக்கக்கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு பணிக்கு அனைத்துத்துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில்,  சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு, 50 வயதுக்கு குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தைப் பெற்று பணியமர்த்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஆசிரியர்களின் விருப்பத்தை பெறாமல், அவர்களை கரோனா பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக்கூறி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ‘ஷிப்ட்’ முறையில், கரோனா கட்டுப்பாட்டு மையப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமலேயே, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு,  போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை. கட்டுப்பாட்டு மையங்களில் தனி மனித விலகல் பின்பற்றப்படாததால், ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், வீடுகளில் இருந்து கவுன்சிலிங் வழங்க தயாராக இருக்கின்றனர். தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களை கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.