/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annaunin_0.jpg)
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இன்று (02-06-25) குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டு சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mery_0.jpg)
இந்த நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பரோல், தண்டனை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை ஞானசேகரன் பெற முடியாது. இந்த வழக்கில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இந்த வழக்கில் குற்றவாளியினுடைய செல்போன் தான் எங்களுக்கு கிடைத்த ஆயுதம். நீதிமன்றம் மூலம் தடயவியல் துறைக்கு அந்த செல்போனை அனுப்பினோம். சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த செல்போனுடைய நடவடிக்கை என்ன? என்பதை தடவியியல் துறை பகுப்பாய்வு செய்தது. அதில் அந்த செல்போன், பிளைட் மோடில் இருந்ததாக கண்டுபிடித்து ஆவணமாக நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பித்தது.
அவருடைய சிம் ஏர்டல் சிம். குற்றம் நடந்த சமயத்தில் குற்றவாளி ஞானசேகரன் தன்னுடைய செல்போனை பிளைட் மோடில் போட்டுள்ளார் என்பதை ஏர்டல் புரொவைடர் (Airtel provider) தெளிவாக நீதிமன்றத்தில் எடுத்துரைக்கிறார்கள். இந்த வழக்கில் இன்னொரு நபர் இருக்கிறார் என்று நீதிமன்றம் கருதினால், அவரையும் இணைத்து குற்றவாளியாக்கி விசாரணை நடத்தலாம் என்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. இந்த வழக்கில் கொடுத்த ஆதாரங்கள் எல்லாம் திருப்தியடைந்ததாலும், ஒருவர் மட்டுமே இதில்சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பதாலும் தான் நீதிமன்றம் ஞானசேகரனுக்கு இந்த தண்டனை வழங்கியுள்ளது. எனவே இதை பற்றி பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை மிகவும் சிறப்பாக இருந்தது. புலன் விசாரணையில் நூலிழையில் கூட அவர்கள் விடவில்லை. எனவே, இந்த வழக்கில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை.
ஞானசேகரனில் செல்போனில் எந்த அழைப்பும் வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணே உறுதி செய்திருக்கிறார். அந்த பெண்ணை ஏமாற்றுவதற்காகவும், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்று காட்டி ஏமாற்றுவதற்காகவும் அவர் போட்ட நாடகம் தான் ஆவணப்பூர்வமாக மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)