
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஜோதி, ராஜேஸ்வரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் முருகன். இரண்டாவது மனைவி ராஜேஸ்வரிக்கு ஜெகதீஸ்வரி, கலையரசி என இரண்டு மகள்கள் உள்ளனர். அண்ணாதுரை தனது மகள் ஜெகதீஸ்வரி வீட்டில் வசித்து வந்தபோது 30.1 2007இல் விழுப்புரத்தில் இறந்தார். அவருக்கு விழுப்புரத்தில் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறப்பட்டது. இந்நிலையில் வேப்பூரை அடுத்த நல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 211) அண்ணாதுரைக்கு சொந்தமான சொத்து உள்ளது. இதில் முருகன் தன்னை மட்டுமே வாரிசாக காட்டி 23.11.2018இல் அண்ணாதுரை இறந்ததாக கூறி நல்லூர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேப்பூர் வட்டாட்சியர் ஆகியோருடன் இணைந்து போலியான இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் தயார் செய்து, சொத்துக்களைப் பட்டா மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவராசு என்பவரிடம் 14.12.2018 அன்று முதல் தனது உறவினர் மாயவன் துணையோடு விற்றுள்ளார்.
இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் அளித்த புகாரின் பேரில் பிரவீன்குமார் 09.02 2021 அன்று நடத்திய விசாரணையில் அண்ணாதுரை விழுப்புரத்தில் இறந்ததற்கு வேப்பூர் வட்டம் நல்லூரில் போலியான இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று சொத்துகளைப் பட்டா மாற்றம் செய்தது தெரியவந்தது.
அதையடுத்து அந்த இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை ரத்து செய்ய விருத்தாசலம் சார் ஆட்சியர் உத்தரவிட்டார். இதை அறிந்துகொண்ட ஜெகதீஸ்வரி போலியான இறப்பு மற்றும் வாரிசு சான்று பெற்று இடத்தை விற்ற முருகன், இடத்தை வாங்கிய தேவராசு, இதற்கு உடந்தையாக இருந்த மாயவன், ஏற்கனவே இறந்தவருக்கு போலியான இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி விருத்தாச்சலம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேப்பூர் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ்பாபு, போலி ஆவணங்களைக் கொண்டு சொத்தினை விற்ற முருகன், வாங்கிய தேவராசு, உடந்தையாக இருந்த மாயவன், மற்றும் போலி சான்றிதழ்கள் அளித்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் கமலா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.