Skip to main content

ஒரு கரண்டி சாப்பாடு மட்டும்தான் பெற்றோர்கள் கேட்கிறார்கள்: கலெக்டரின் உருக்கமான பேட்டி

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
 collector-action



பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன்கள் அவர்களுக்கு உணவு அளிக்காமல், வீட்டைவிட்டு வெளியேற்றியதால் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த சொத்துக்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,
 

கடந்த 19.06.2018 அன்று கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியினர் தங்கள் பிள்ளைகள் சரியாக பராமரிக்காமல் துன்புறுத்துவதாகவும், தாங்கள் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்தில் ஒரு பகுதியை பெற்று தருமாறும் மனு அளித்தனர்.
 

இவர்களது மூத்த மகன் பழனி அரசு வேலையில் உள்ளார். இளைய மகன் செல்வம் கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இந்த தம்பதியினர் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் சுயமாக சம்பாதித்த 5 ஏக்கர் சொத்தை இரு மகன்களுக்கும் சமமாக எழுதிக்கொடுத்துள்ளனர். 
 

அதன் பின்னர் இரு மகன்களும் பெற்றோர்களுக்கு உணவு வழங்காமலும், பராமரிக்காமலும் விட்டுவிட்டார்கள். இந்த நிலையில் பெற்றோர் இருவரும் பசியும், பட்டினியுமாக மன உளைச்சலுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். பிள்ளைகளுக்கு 5 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டு தங்களது சாப்பாட்டிற்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 

இவர்கள் மனுவை பெற்றவுடன் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டது. இதில் இளைய மகன் செல்வம் தந்தை கண்ணனை மிகவும் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் கண்ணன் வீட்டிற்கு வருவதற்கே பயந்து சாலையோரம், தெருக்களில் பல நாட்கள் படுத்துள்ளார்.
 

இந்த நிலையில் மூத்த மகன் ஜீவனாம்சம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கண்ணன் எங்களுடைய நிலத்தை பெற்றுத்தந்தால்போதும். அதை வைத்து கொண்டு எங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்வோம். சுயமாக சம்பாதித்து வாழ்வோம் என்றார். 
 

இந்த வயதிலும் கண்ணன் தன்னம்பிக்கையுடன் பேசியதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்னிடம் மனு கொடுத்தபோது கூட, இரண்டு மகன்களுக்கு எழுதிக்கொடுத்த நிலத்தில் இருந்து தலா 60 செண்ட் கொடுத்தால் போதும், அதை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வாழ்கிறோம் என்றார் கண்ணன். 
 

இதனை கருத்தில்கொண்டு மொத்த இடத்திற்கான பட்டா, சிட்டா, அனுபவம் கண்ணன் பெயரில் 2.12 ஏக்கர், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கர் மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 
 

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளைகள் மூலம் தொடர்ந்து உடல் ரீதியான துன்புறுத்தல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கரண்டி சாப்பாடு மட்டும்தான் பெற்றோர்கள் கேட்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற புகார்களை சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் அல்லது என்னிடம் நேரடியாக வழங்கலாம் என்றார். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
To the students and parents, cm M.K. Stalin's key instruction

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.