/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks3232111223.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114- வது பிறந்தநாளையொட்டி, இன்று (15/09/2022) காலை 07.00 மணியளவில் மதுரை மாவட்டம், நெல்பேட்டையில் உள்ள அவரது அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, எ.வ.வேலு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் அண்ணாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்ட முதலமைச்சர், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mksa32323111.jpg)
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கு பசியோடு கல்வி பயில வரும் மாணவர்களுக்கான திட்டம் காலை உணவுத் திட்டம். பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக இருப்பதைப் போன்ற கருணை வடிவான திட்டம். வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டமாக காலை உணவுத் திட்டம் இருக்கும். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும், பசி சுமையைக் குறைப்பதே அரசின் நோக்கம். செலவு என்பதை நிர்வாக மொழியில் சொல்கிறேன்; உண்மையில் இது செலவு அல்ல, நமது அரசின் கடமை. இன்னும் சொன்னால் எனது கடமையாகவே நான் கருதுகிறேன்.
மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதால், தமிழ்நாட்டின் கல்வி விகிதம் அதிகமாகும். மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்; படியுங்கள். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை; படிப்பு ஒன்றுதான் யாராலும் படிக்க முடியாத சொத்து" என்று மாணவர்களை அறிவுறுத்தினார்.
Follow Us