கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளைதரும் ரேபிட் டெஸ்டிங் கிட்களை கொள்முதல் செய்யத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய,மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றைகண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. தமிழக அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிட்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தகிட்கள், 9 இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில் சீனாவை சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று. இந்தகருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தக் கருவிகளை கொள்முதல் ஆர்டர் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்டிங் கிட் உண்மையான பரிசோதனை முடிவுகளைதரவில்லை என அமெரிக்கா தெரிவித்தது, மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைதொடர்ந்து, குறைபாடுடைய ரேபிட் டெஸ்டிங் கிட்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேபிட் டெஸ்டிங் கிட்கள் கொள்முதல் செய்தபோது மருந்து பொருட்கள் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.